டில்லி

ர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி கே சிவகுமார் மீது பண மோசடி குற்றம் பதியப்பட்டது.   இந்த வழக்கில் அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருந்தார்.  ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதிட்டது.   ஆயினும் கடந்த மாதம் 23 ஆம் தேதி டில்லி உயர்நீதிமன்றம் சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியது.

அத்துடன் சிவகுமார் வழக்கு குறித்த ஆவணம் மற்றும் சாட்சிகளை மாற்றுவார் என தெரிவிக்கப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.   திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகுமார் அன்றைய தினமே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று இந்த ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.   இந்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் நாரிமன் மற்றும் ரவீந்திரபட் ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தது.   வழக்கில் அமலாக்கத்துறை முன்பு ப சிதம்பரம் வழக்கில் தெரிவித்த அதே பதிலை இப்போதும் அளித்தது.

அந்த வாதங்களை அப்படியே நகல் எடுத்து அளித்ததினால் சிவகுமாரை முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இதையொட்டி அமலாக்கத் துரையை உச்சநீதிமன்றம் கடுமையாகத் தாக்கி உள்ளது.   மேலும் குடிமக்களை இவ்வாறு நடத்துவது சரி இல்லை என அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்து அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.