டில்லி

டில்லி நகர எல்லைக்குள் பட்டாசுகளைக் கொண்டு வர உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

தசரா, மற்றும் தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இந்துப் பண்டிகை ஆகும்.  அதையொட்டி பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதும் பல காலமாக நிகழ்ந்து வருகிறது.  அதே நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 ஆம் வருடம் உச்சநீதி மன்றம் டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பட்டாசு விற்பனையை முழுவதுமாக தடை செய்திருந்தது.  தற்போது தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, நகருக்குள்ளும் அதன் சுற்றுப்புறங்களுக்குள்ளும் பட்டாசு கொண்டு வரக்கூடாது என உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.  அத்துடன் ஏற்கனவே இங்குள்ள பட்டாசுகள் இந்த வருடத்துக்கு தேவைக்கு மேல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் பட்டாசுகளை டில்லியில் தடை விதிப்பதை ஆராய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் அடங்கிய ஒரு குழுவை உச்ச நீதி மன்றம் அமைத்துள்ளது.  அந்தக் குழு தனது அறிக்கையை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.