மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எதிர்க்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு

டில்லி,

ரசின் அனைத்துவிதமான திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எப்படி எதிர்க்கமுடியும்? என மேற்கு வங்க அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும், மானியங்களை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.

இதற்கு மக்களிடைய பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவ்வாறு இணைக்க முடியாது என பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அதையடுத்து, மேற்குவங்க அரசு சார்பில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து மாநில அரசு, எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக தனிநபர் வழக்கு தொடரலாம் என்ற அடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம்.

ஆனால் மாநில அரசு சார்பில், மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? என காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கில்,   4 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.