டில்லி:

ச்சநீதி மன்ற  நீதிபதியாக கேரளாவை சேர்ந்த, தற்போது  உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவியில் உள்ள ஜோசப்பை மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அறிவித்தது. ஆனால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உள்பட  மூத்த நீதிபதிகள் தலைமையிலான கொலிஜியம் இன்று கூடுகிறது.

 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான  மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம்  தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்ச கத்துக்கு பரிந்துரைக்கும். இதை மத்திய அரசு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும். இதுவே பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நடைமுறை.

ஆனால், சமீபத்தில், கேரளாவை சேர்ந்த  உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ‘கொலிஜியம்’ சிபாரிசு செய்திருந்தது. ஆனால், அந்த சிபாரிசை ஏற்க மறுத்து, மத்திய அரசின் சட்ட ஆணையம் திருப்பி அனுப்பி விட்டது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் செலமேஷ்வர் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தி தலைமை நீதிபதிக்கு  கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் கொலிஜியம் கூட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜோசப் நியமனம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, மீண்டும் தனது பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.