கோவை 2 பள்ளிக்குழந்தைகள் கொலை: குற்றவாளியின் மரண தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது!

டில்லி:

கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த வழக்கில்,குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது.

கோவையைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபரின் முஸ்கான், ரித்திக் என்ற  2 குழந்தைகளும், கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி பள்ளிக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழந்தைகளின் உடல்  பொள்ளாச்சி அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில், கடத்தப்பட்ட  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,இந்த கொடூர கொலை தொடர்பாக கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில்,  மோகன்ராஜ் என்கவுண்டரில் செய்யப்பட, மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இந்த வழக்கில், கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி  , குற்றவாளி மனோகரனுக்கு மகிளா நீதிமன்றம் இரட்டை தூக்குதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், தீர்ப்பை உறுதி செய்த சென்னை உயர்நீதி மன்றம் மனோகரன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி நீதிபதி, மனோகரனுக்கு விதிக்கப்பபட்ட  தூக்கு தண்டனையை சரியே என்று தண்டனை  உறுதி செய்து தீர்ப்பு அளித்தார்.