40 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு தராத இமாச்சல பிரதேச அரசு மற்றும் யூபிஎஸ்சி-க்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி:

40 ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு போராடிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பதவி அளிக்க மறுத்த விவகாரத்தில், இமாச்சல பிரதேச அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


1977-ம் ஆண்டு ஐபிஎஸ் கேடரான சன்னிலால் சர்மா சிறப்பாக பணியாற்றியதற்காக பதக்கம் பெற்றவர். இவருக்கு பதவி உயர்வு கிடைக்காததால், கடந்த 2009&ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவருக்கு சீனியாரிட்டி இருப்பதால் பதவி உயர்வு தருமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே சர்மா இறந்துவிட்டார்.

கோர்ட் உத்தரவை செயல்படுத்தவில்லை என்று கோரி, இமாச்சலப் பிரதேச அரசு மற்றும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மீது அவரது மனைவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
சர்மாவின் மனைவிக்கு சாதகமாக மீண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் அப்பீல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

ஐபிஎஸ் அதிகாரியான சன்னிலால் சர்மா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வுக்காக போராடி இறந்தும் போனார்.

சர்மாவுக்கு பதவி உயர்வு தராமல் மறுத்தது தவறு. அவரது மனைவியை வழக்கு தொடர்பாக அலைக்கழித்ததற்காக இமாச்சலப் பிரதேச அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் தலா ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் 1977-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, சர்மாவுக்கு வரவேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பென்சன் மற்றும் ஓய்வு பலன்கள் ஆகியவற்றை சர்மாவின் மனைவிக்கு 4 வார காலத்துக்குள் தரவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.