தாஜ்மகாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

டில்லி

தாஜ்மகாலுக்குள் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி கோரிய இஸ்லாமியர்களின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது.   தனது மறைந்த மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னன் ஷாஜகான் கட்டிய இந்தக் கட்டிடம் இன்றும் உலக அளவில் பல பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.   இந்த வளாகத்தில் மசூதி ஒன்று அமிந்துள்ளது.   இங்கு வரும் பார்வையாளர்கள் இந்த மசூதியில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை நடத்தி வந்தனர்.

இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு இடையூறு செய்யும் என தொல்லியல் துறை கூறியதை அடுத்து ஆக்ரா நீதிமன்றம் அங்கு பார்வையாளர்கள் தொழுகை நடத்துவதை தடை செய்து தீர்ப்பளித்தது.    அந்த தீர்ப்பை எதிர்த்து தாஜ்மகால் மசூதி நிர்வாகக் குழு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.   இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் சிக்ரி ஆகியோரின் அமர்வு விசாரணை செய்து வந்தது.

இந்த மனுவை அளித்த குழுவின் சார்பில்  வருடம் முழுவதும் பல இஸ்லாமியச் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தாஜ்மகாலில் தொழுகை நடத்த தடை விதிக்க தடை கூடாது என வாதிடப்பட்டது.  நீதிபதிகள் அதை மறுத்து தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்று என்பதால் பாதுகாப்பு முக்கியம் எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த தடை உள்ளதாகவும்  வேறு இடங்களுக்கு சென்று தொழுகை நடத்தி விட்டு தாஜ்மகாலை காண வரலாம் எனவும் அமர்வு தெரிவித்துள்ளது.