டில்லி

தொலைதூரக் கல்வி என்னும் தபால் வழிக்கல்வியில் தொழில் நுட்பக் கல்வி கற்பிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடெங்கும் தற்போது தொலை தூரக் கல்வி மூலம் பலரும் கல்வி கற்று வருகின்றனர்.  இதற்கு முக்கிய காரணம் தங்களின் பொருளாதாரத்தை முன்னிட்டு மேல் கல்வி பயில முடியாமல் பணி புரியச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே ஆகும்.     அவர்கள் மேல் கல்வி கற்க தொலை தூரக் கல்வி பெரிதும் உதவி புரிந்து வருகின்றது.

சமீபத்தில் தொலை தூரக் கல்வி மூலம் பொறியியல் உட்பட்ட தொழில் நுட்பக் கல்விகளை கற்பிக்க பல்கலைக்கழகங்கள் கோரி இருந்தனர்.  இதற்கு ஒரிசா உயர்நீதி மன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.  அதே நேரத்தில் பஞ்சாப் அரியானா உயர்நீதி மன்றம் ஒப்புதல் அளிக்க வில்லை.   இதற்கு சில சோதனை வகுப்புகளை தொலை தூரக் கல்வி மூலம் நடத்துவது இயலாது என காரணம் கூறப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.  தீர்ப்பில் தொழில்நுட்பக் கல்வியை தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் கற்பிக்க இயலாது என்னும் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக் காட்டி  பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்தது.   அத்துடன் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.