டில்லி:

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை திறப்பது தொடர்பான வழக்கில், வேதாந்தா வின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம்,  ஆலையை மூட தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு  எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை  திறப்பது சம்பந்தமாக, ஆலையை மூடிய தமிழக அரசின் அரசாணை குறித்து, சென்னை உயர்நீதி மன்றத்தை நாட வேதாந்தாவுக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது  விசாரணை நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

புற்றுநோய் உள்பட ஏராளமான நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்,  13 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து மூடியது.

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து  ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம், தனியாக விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி, சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து,  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தது. இந்த மனுமீதான விசாரணை கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதி மன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் வேதாந்தா கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை  மூடிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தை நாட உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதி மக்களும்,  ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.