டில்லி

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடிக்க மதிமுக தலைவர் வைகோ அளித்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்ற மாதம் 5ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையொட்டி பிரச்னை எழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். டெலிபோன் வசதி இல்லாத ஒரு இடத்தில் ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும், வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதையொட்டி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில்  வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த ஆட்கொணர்வு மனுவில், ”சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். அவ்வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை.

அத்துடன் ஃபரூக் அப்துல்லா எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை என்பதால் அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும், எனக் கோரியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா தலைமையில் இந்த மனு விசாரிக்கப்பட்டு வந்தது. வைகோ, தரப்பு வழக்கறிஞர் காஷ்மீரில் ஜனநாயகம் என்பதே இல்லாத நிலை உள்ளதாகவும் ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் வாதிட்டார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி வைகோ தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அத்துடன் அவசியம் தேவைப்பட்டால் காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுக வைகோவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.   அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டப்படி கைதான ஃபரூக் அப்துல்லாவை முன்னிறுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.