டெல்லி: அயோத்தியில் ராம ஜென்மபூமியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ராம ஜென்மபூமி இடத்தில் அலகாபாத் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தோண்டப்பட்ட போது கிடைத்த பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்று 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணன் முராரி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிடுகையில், ராமர் கோயில் வழக்கில் அந்த பொருட்களை பாதுகாக்க உத்தரவிட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதே என்றனர்.
அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையும், பொருட்களை பாதுகாப்பதாகக் கூறியுள்ளது என்று கூறினர்.
அதை கேட்டதும் நீதிபதிகள், பிறகு எதற்காக அரசியலைப்புச் சட்டம் 32-வது பிரிவில் மனு செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. மனுக்களை விசாரிக்க முடியாது தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முக்கியத்துவம் இல்லாத மனுத்தாக்கலுக்கு அபராதம் விதிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுவைத் தாக்கல்செய்த மனுதாரர்களுக்கு  நீதிமன்ற செலவாக தலா ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.