நீதிபதி லோயா மர்ம மரண விசாரணை கோரிய சீராய்வு மனு தள்ளுபடி

டில்லி:

குஜராத் மாநிலத்தில் 2005-ம் ஆண்டு சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதால் இது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து மறு விசாரணைக்கு உத்தரவிட மறுத்து விட்டனர்.