சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் சரணடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 22ந்தேதி உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்ற விசாரணையின்போது,  ஜூன் 1ந்தேதி வரை  எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின் போது, எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், இதுகுறித்து எழும்பூர் மெட்ரோபாலிட்டன் நீதி மன்றத்தை அணுகி முன்ஜாமின் தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே, சென்னை உயர்நீதி மன்றம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, அவரை ‘ கைது செய்து விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது உச்சநீதி மன்றமும் அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

ஏற்கனவே எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறையினர் 18பக்கம் குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது எஸ்.வி.சேகரை உச்சநீதி மன்றமும் கைவிட்டு விட்ட நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் அல்லது சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.