3 ஆவது குழந்தையை தத்து கொடுத்தாலும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது

டில்லி

ஞ்சாயத்து தேர்தலில் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என உள்ளது. அதே நேரத்தில் இரு குழந்தைகள் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்கள் பதவி இழக்க நேரிடும் எனவும் அச்சட்டத்தில் உள்ளது.

இந்த தடையை எதிர்த்து ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு ஒரிசா உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை ஒட்டி அந்த பஞாயத்து உறுப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

அப்போது உறுப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயின், “மூன்று குழந்தைகள் உள்ள உறுப்பினர் ஒரு குழந்தையை தத்து கொடுத்தால் சட்டப்படி அவருக்கு இரு குழந்தைகள் மட்டுமே இருக்கும். அதனால் அவரால் போட்டியிட முடியுமா? அதே போல் ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறக்கும் போது அந்த உறுப்பினருக்கு எவ்வாறு தடை விதிக்க முடியும்?” என கேள்விகள் எழுப்பினார்.

இதற்கு உச்சநீதிமன்ற அமர்வு, “மூன்று குழந்தைகள் பிறந்தால் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தத்து கொடுத்த குழந்தையும் கொடுத்தவருக்கு பிறந்த குழந்தை தான். ஆகவே அவர்களும்  இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் எனவே கருதப்படுவார்கள். அத்துடன் இரட்டை குழந்தை மற்றும் மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் ஆகும். எனவே சட்டத்தை இது போன்ற அரிதான விஷயங்களுக்கக திருத்தம் செய்ய முடியாது” என பதில் அளித்துள்ளது.