காப்பகங்களில் இருந்து ”காணாமல்” போன 2 லட்சம் குழந்தைகள் : உச்சநீதிமன்றம் கவலை

டில்லி

ச்ச நீதிமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி காப்பகங்களில் இருந்து ஒரே வருடத்தில் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் உள்ளதாக தெரிய வருகிறது.

காப்பகங்களின் எண்ணிக்கை குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அந்த வழக்கை ஒட்டி காப்பகங்களின் எண்ணிக்கை மற்றும் அந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை  அளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு  உத்தரவிட்டது.   மத்திய அரசு ஓவ்வொரு வருடமும் மாநில அரசுகள் அளிக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த தகவலை நீதிமன்றத்துக்கு அளித்த்து.

அந்த கணக்குப்படி கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 4.73 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் வசித்து வந்தனர்.    ஆனால் 2018 ஆம் வருடக் கணக்கின் படி மொத்த்ம் 2.61 லட்சம் குழந்தைகள் மட்டுமே காப்பகங்களில் வசித்து வருகின்றனர்.   மீதமுள்ள 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு வழக்கை நடத்தி வரும் உச்சநீதிமன்ற அமர்வு அதிர்ச்சியை தெரிவித்துள்ளது.  அமர்வு, “இந்த தகவல் நீதிமன்றத்தை மிகவும் வேதனைப்படுத்துகிறது.   இது வெறும் எண்ணிக்கை அல்ல.  உயிருள்ள குழந்தைகள்.   இது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய விவகாரம் ஆகும்.

இந்த குழந்தைகள் உண்மையிலேயே காணாமல் போய் விட்டனரா? அல்லது காப்பகங்கள் அதிக உதவி பெற பொய்யான தகவல்களை போன வருடம் அளித்ததா?  அல்லது இந்த குழந்தைகள் தவறாக பயன் படுத்தப்பட்டுள்ளனரா? “ என சந்தேகத்தை எழுப்பி உள்ளது.  மேலும் இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.