எரிக்சனுக்கு ரூ550 கோடி அனில் அம்பானி செலுத்த டிசம்பர்15 இறுதிக் கெடு

டில்லி

எரிக்சன் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் நிறுவனம் ரூ. 40000 கோடி கடனில் சிக்கியது. அந்த நிறுவனத்தால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அனில் அம்பானியின் சகோதரரும் ஜியோ நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானி தொலை தொடர்பு கோபுரம் உட்பட பல சொத்துக்களை வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.

ஆயினும் தொலை தொடர்புத் துறைக்கு தர வேண்டிய தொகையை அனில் அம்பானி செலுத்தாததால் இந்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கிய வகையில் ஸ்வீடிஷ் நிறுவனமான எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ. 550 கோடி பாக்கி வைத்துள்ளது. பாக்கியை செலுத்தாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் எரிக்சன் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி தொலை தொடர்புத்துறையின் உத்தரவால் தம்மால் எதிர்பார்த்தபடி சொத்துக்களை விற்க முடியவில்லை எனவும் அந்த விற்பனை தொடர தொலை தொடர்புத் துறை தடையில்லா சான்று அளித்த பிறகே தம்மால் பாக்கியை செலுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

அதற்கு எரிக்சன் நிறுவனம் அளித்த பதிலில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்த விற்பனையில் ரூ.5000 கோடி பணம் பெற்றுள்ளது எனவும் தங்களுக்கு தர வேண்டிய தொகை ரூ.550 கோடி மட்டுமே என தெரிவித்தது.

அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.550 கோடியை செலுத்த வேண்டும் எனவும் இனியும் இந்த கெடு நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் உத்தரவிட்டுள்ளது.