டெல்லி:

காஷ்மீர் பல்லத்தாக்குகளில் கூட்டத்தினரை கலைக்க பெல்லட் துப்பாக்கிளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை வரும் 10ம் தேதி க்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் பல்லத்தாக்குகளில் உருண்டை துப்பாக்கிகளை (பெல்லட் கன்ஸ்) பயன்படுத்தி கூட்டத்தினரை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில வக்கீல்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடரப்பட்டது.

‘‘இந்த ரக துப்பாக்கிகள் நீண்ட காலமாக வன்முறை கலைக்க பயன்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய நேரங்களில் மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. அதனால் இதற்கு தடை விதிக்க முடியாது’’ என்று ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வக்கீலகள் சங்கம் கடந்த டிசம்பரில் மேல் முறையீடு செய்தது. டிசம்பர் 14ம் தேதி நடந்த விசாரணையின் போது மூத்த வக்கீல்கள் ஷா, குவேயும் ஆகியோர் ஆஜராகி உருண்டை துப்பாக்கிளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘ கூட்டத்தினரை கட்டுப்படுத்த உருண்டை துப்பாக்கிகள் கண்மூடித்தனமாகவும், அதிகப்படியாகவும் பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் உரிய அதிகார மையங்களின் கவனத்தோடு முறையாக பயன்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இந்த ரக துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் ஒரு குண்டு பல துகள்களாக சிதறி கூட்டத்தினரை தாக்கும். இந்த சிறிய துகள்கள் மென்மையான மனித தோலை ஊடுறுவி செல்லக் கூடியவை. இதனால் சமயங்களில் பலருக்கு கண்களில் குண்டு துகள்கள் ஊ டுறுவி பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.

‘‘ உருண்டை துப்பாக்கிகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் குறித்த விபரங்களை மத்திய அரசு வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.