டில்லி வன்முறை தீவிரமடைந்ததற்கு காவல்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

டில்லி

டில்லியில் வன்முறை தீவிரமடைந்ததற்கு காவல்துறை சுதந்திரமாகச் செயல்படாததுதான் காரணம் என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டில்லி மாநகரில் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்த போராட்டம் நகர் எங்கும் பரவி வடகிழக்கு  பகுதியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த போராட்ட வன்முறை தொடர்பாக வழக்குப் பதியவும் ஷாகின் பாக் போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும் காவல்துறைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வன்முறையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை டில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.   உச்சநீதிமன்றம், “காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படாததே இந்த வன்முறை தீவிரமடைந்ததற்கு முக்கிய காரணமாகும்.   காவல்துறையினர் ஏன் இந்த அளவுக்கு நிலைமையை கை மீற விட்டார்கள்?

டில்லி நகரில் நடந்த வன்முறை நிகழ்வுகள் துரதிருஷ்ட வசமானது.   இவ்வாறு வன்முறை வெடிக்கும் போது காவல்துறை  உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.   அவர்களிடம் தொழில் நுட்ப பற்றாக்குறை மற்றும் முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாமை இருந்துள்ளது.   அவர்கள் தங்கள் சட்ட உரிமைப்படி செயல்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வன்முறை நிகழ்ந்திருக்காது.

தற்போது வன்முறை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.   இந்த வழக்குகள் டில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.  அத்துடன் ஷாகீன் பாக்  போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி