கேரளாவிற்காக பாட்டுப்பாடி நிதி திரட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கலைநிகழ்ச்சிகள் மூலம் பாட்டுப்பாடி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதி திரட்டினர். நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்த கலைநிகழ்ச்சியில் ரூ. 10லட்சத்திற்கும் மேல் நிதி திரட்டப்பட்டது.

judges

பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக இம்மாத முதல் வாரத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 13 மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெள்ளப்பெருக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அழிவிலிருந்து மீண்டு வரும் கேரளாவிற்கு மத்திய, மாநில அரசுகள், பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் கேரள நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

உச்சநீதிமன்ற வளாகத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கட்டிடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்த நீதிபதிகள் ஏற்பாடு செய்தனர். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்ற நீதிபதிகள், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கே.எம்.ஜோசப், பிரபல மலையாள திரைப்படமான அமரம் படத்தில் இருந்து மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும் பாடலை பிரபல பின்னணிப் பாடகர் மோஹித் சவுகானுடன் இணைந்து பாடினார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய ஜோசப், ”வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான், அவர்களுக்காக இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன்” என குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ” கலை நிகழ்ச்சிகள் இருப்பதால் சிலர் இதைக் கொண்டாட்டமாகக் கருதலாம். ஆனால் இது நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சி இது “ என்றார்.

நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டது. முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.25,000 பணத்தை கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினர். உச்ச நீதிமன்ற அலுவலர்கள் கேரள மக்களுக்கு தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.