தலைமைநீதிபதிக்கு எதிராக குரல்கொடுத்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு

டில்லி:

ச்சநீதி மன்ற தலைமைநீதிபதிக்கு தீபக் மிஸ்ராவுக்கு  எதிராக குரல் கொடுத்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வுபெறுகிறார். அவரது  கடைசி வேலை நாள் மே 18ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதி மன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தபடியால், இன்றுடன்  அவரது பணி நிறைவு பெறுகிறது.

கடந்த 2012ல் இருந்து தொடர்ந்து 6 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்த மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர்  தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நீதித்துறையில் வழக்குகள் ஒதுக்குவது குறித்து உத்தரவுகளை தலைமை நீதிபதி பொறுப்புடன் அளிக்க வேண்டும்.   வெறுப்பு, விருப்பின் அடிப்படைகளில் வழக்குகள் ஒதுக்கப்படும் போது அந்த அறிவிப்பு நம்பகத் தன்மையை இழந்து விடுகிறது என்று  நேரடியாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தலைமை நீதிபதி மிஸ்ராவின் ஒருதலைப்பட்சமான  நடவடிக்கை குறித்து,  சக மூத்த  நீதிபதி களான குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், மத்திய அரசு  நீதித்துறையிலும், நீதிபதிகள் நியமனத்திலும் தலையிடுவதாகவும், அதை தவிர்க்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக உச்சநீதிமன்ற கொலீ ஜியம் மேற்கொண்ட பரிந்துரைகளை ஏற்காமல் மத்திய அரசு தலையீடு செய்து வருவதாகவும்,  இதே நிலை நீடித்தால், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டால், அது ஜனநாயகத்துக்கு சாவுமணி என்றும், உச்சநீதிமன்ற செயல்பாட்டில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்  எனவே இதற்கு முடிவு கட்ட,  நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு குறித்து, அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும்  என்று மத்திய அரசு மீது குற்றம் சாட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த 2வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த செல்லமேஸ்வர் பணி நாள் கடந்த மே 18ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீதி மன்றம் விடுமுறை காரணமாக இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

தனது பணி ஓய்வுக்கு பிறகு, எனக்கு எந்த ஒரு அரசுப்பணியும் தேவை இல்லை.   நான் எனது ஓய்வுக்குப் பின் எந்த ஒரு அரசுப்பணிக்கும் விண்ணப்பிக்கப் போவதும் இல்லை என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.