ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

வழக்கின் விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று தலைமைநீதிபதி தீபக்மிஸ்ரா, ஏஎம் கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அமர்வு அறிவித்து உள்ளது. இது தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மே மாதம் 13ந்தேதி நடத்திய மாபெரும் போராட் டத்தில் காவல்களின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  ஆலை மூடப்பட்ட  விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.  இந்தகுழுவானது மாநில அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக்களை 3 பேர் குழு அறிய வேண்டும் எனவும், விசாரணைக்குழு 6 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து,  தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது. அதில், விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்றுகூறி  அவசர வழக்காக விசாரிக்க கோரியது.

தமிழக அரசின் மனுமீதான  விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்றும், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதி மன்றம் கூறி உள்ளது..