அனில் அம்பானி ஆதரவு : உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது

--

டில்லி

னில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட இரு உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது செய்யபட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது எரிக்சன் நிறுவனம் தனக்கு வர வேண்டிய பாக்கிக்காக வழக்கு தொடர்ந்தது.   அந்த வழக்கில் அனில் அம்பானி உடனடியாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை செலுத்தவில்லை.   அதை ஒட்டி மேல் முறையீடு செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அனில் அம்பானி செலுத்தவில்லை.

அதனால் எரிக்சன் நிறுவனம் அனில் அம்பானியை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கில் அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் அவசியம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற அதிகாரிகள் மானவ் சர்மா மற்றும் தபன்குமார் சக்ரபோர்த்தி ஆகிய இருவ்ரும் இந்த உத்தரவை மாற்றி உச்சநீதிமன்ற இணையத்தில் பதிவிட்டனர்     அவர்கள் மாற்றிய பிறகு உத்தரவில் அனில் அம்பானி மற்றும்  ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டியது அவசியமில்லை என காணப்பட்டது.

இது குறித்து எரிக்சன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  அதை ஒட்டி உச்சநீதிமன்றம் இந்த இரு அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்தது.  அவர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தியது.   விசாரணையில் இருவரும் வேண்டுமென்றே இவ்வாறு செய்தது தெரிய வந்துள்ளதால் இருவரும் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.