டில்லி

குற்றப் பின்னணி உள்ள அதிகாரிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பிரகாஷ் ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.  அந்த மனுவில் அவர் இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு ஒப்புகை இயந்திரம் பயன்படுத்துவதால் புதிய தேர்தல் வழிமுறைகளை அறிமுகப் படுத்தக் கோரி இருந்தார்.   அத்துடன் தேர்தல் அதிகாரிகள் நியமனம், சிசிடிவி காமிரா அமைத்தல் ஆகியவை பற்றியும் விளக்கங்கள் கேட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் கீழ் அமைக்கப்பட்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது.   இது குறித்து உச்சநீதி மன்ற அமர்வு, “குற்றப் பின்னணி உள்ள அதிகாரிகளை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தக் கூடாது.   அது மட்டும் இன்றி புகார் எழுப்பப்பட்டு விசாரணையில் உள்ள அதிகாரிகளையும் உபயோகப் படுத்தக் கூடாது.   சிசிடிவி காமிரா உபயோகப்படுத்துவதை நீதிமன்றம் கட்டாயப் படுத்த முடியாது.  அது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தே அமையும்.

அரசு சார்பில் ஆஜரான வேணுகோபால் ஏற்கனவே வாக்கு ஒப்புகை இயந்திரம் உபயோகம் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டதாக கூறியதை இந்த நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது.   எனவே புதிய வழிமுறைகளை நீதிமன்றம் அறிமுகப்படுத்த தேவை இல்லை.  தேவை எனில் இது குறித்து தனியே வழங்கப்பட்ட மனுவை விசாரிக்கும் போது மேற்கொண்டு விவரங்கள் அளிக்கப்படும்” என கூறி உள்ளது.