நாளை மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்ற உத்தரவு

டில்லி

த்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் அரசு ஆட்டம் கண்டது. அதையொட்டி மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் ஆளுநர் உத்தரவுக்கிணங்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோர இருந்த போது ஆளுநர் உரை முடிந்ததும் சபாநாயகர் கொரோனா காரணமாக பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  இந்த மனு விசாரணையில் காங்கிரஸ் சார்பில் ஆஜரான துஷ்யந்த் தவே ஆளுநருக்கு நம்பிக்கை வாக்கு கோருமாறு உத்தரவிட அதிகாரம் இல்லை எனவும் சபாநாயகரே முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போது மாநிலத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத் தேர்தல் நடந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.  இதற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் உச்சநீதிமன்றம் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.