ராஜஸ்தான் அரசுக்கு ஆரவல்லி மலையில் சுரங்கப்பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி

ராஜஸ்தான் அரசின் சட்ட விரோதமான சுரங்கங்களில்  48 மணி நேரத்துக்குள் பணிகளை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஆரவல்லி மலையில் செம்பு உள்ளிட்ட பல தாதுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வெட்டி எடுக்கும் பணியை ராஜஸ்தான் அரசு செய்து வருகிறது. இவ்வாறு வெட்டி எடுப்பதால் மலையே அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தற்போது இந்த கணிம சுரங்கங்கள் சுமார் 115.34 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளதாகவும் அதில் பல சுரங்கங்கள் அரசால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை ஒட்டி இந்த சுரங்கங்களை மூட உத்தரவிடுமாறு பொது நல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கை இன்று விசாரித்த அமர்வு, “அரசின் இந்த சுரங்கங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆர்வலர்கள் தெரிவிப்பது போல் மலை சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. அதனால் டில்லியில் மாசு அதிகரித்து வருகிறது.

எனவே அரசு சட்ட விரோதமாக அமைத்துள்ள 115.34 ஹெக்டேர் சுரங்கத்தில் பணிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் நிறுத்த வேண்டும். அத்துடன் இந்த நிறுத்தம் குறித்த அறிக்கையை ராஜஸ்தான் மாநில தலைமை செயலர் உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.