டில்லி

பி மாநிலத்தில் ஹத்ராசில் நடந்த பலாத்கார கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு தலித் இனத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுத் தாக்கப்பட்டார்.  அவர் டில்லி சப்தர்ஜங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதை அடுத்து காவல்துறையினர் ஹத்ராஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவோடு இரவாகச் சடலத்தை காவல்துறையினர் எரித்தனர்.  இந்த வழக்கு குறித்து நாடெங்கும் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.  இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  மேலும் இந்த வழக்கின் விசாரணையை உபி மாநிலத்தில் விசாரிக்கக் கூடாது எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,  நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரம்ணியன் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது உபி அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், அந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையொட்டி தலைமை நீதிபதி பாப்டே, “ஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் நடத்தலாம். இதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.  அப்படி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் நாங்கள் இங்கு தான் இருக்கிறோம்” என அமர்வின் சார்பில் தெரிவித்துள்ளார்.