அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை : 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

--

டில்லி

யோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை இன்னும் 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.    இந்த மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்ஹ்ட தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இந்த  வழக்கை ரேபரேலி நீதிமன்றம் விசாரித்து வந்தது.

ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.   அதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.   அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.   இவ்வாறு பாஜக தலைவர்கள் விடுதலை  செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதையொட்டி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இந்த விசாரணை மிகவும் மெதுவாக நடைபெறுவதாக அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்னும் 9 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.