டில்லி

ச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் “பிருந்தாவன விதவைகளுக்கு மறுமணம் தேவையில்லை, வேலவாய்ப்புதான் தேவை” என கூறி உள்ளார்.

இந்தியாவில் கிருஷ்ணர் வசித்ததாகக் கூறப்படும் ஒரு பகுதி யமுனா நதிக்கரையிலுள்ள பிருந்தாவனம்.  இந்த நகரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களில் பலர் தங்கள் குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்.  வாழ வழியின்றி இறைவனின் கருணை இவ்வளவு தான் என நினைத்து இங்கு தங்கி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதி மன்றம் இந்த விதவைகளின் மேம்பாட்டுக்காக ஆறு பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது. அதில் பிரபல சமூக சேவகர்களான சுனிதா தர், மீரா கன்னா, அபா சிங்கல், அபராஜிதா சிங் ஆகியோரும் உள்ளனர்.   இந்தக் குழு இங்குள்ள விதவைகளின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து அவர்களிடம் மறுமண எண்ணத்தை வளர்க்குமாறு உச்சநீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.  இந்தக் குழு தனது ஆலோசனைகளை வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கோரி உள்ளது.

இந்த குழுவில் உள்ள மீரா கன்னா ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “விதவைகள் மறுமணம் புரிந்துக் கொள்வது அவர்களின் சொந்த விருப்பம்.  அதை சட்டத்தைக் கொண்டு வலியுறுத்த முடியாது.  இங்குள்ளவர்களில் பலர் வயதானவர்கள் மற்றும் பழைய நம்பிக்கையில் இருந்து மாறாத இளம்பெண்கள்.  எனவே இவர்கள் மறுமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  இவர்களுடைய தற்போதைய ஒரே தேவை வேலைவாய்ப்பு மட்டுமே.  இவர்களுக்கு பணி புரிய வாய்ப்பளித்தால் தங்களின் வாழ்வாதாரத்தை தாங்களே கவனித்துக் கொள்வார்கள்.

இடம் பெயர்ந்த எந்தப் பெண்ணுக்குமே பாலியல் சீண்டல்கள் அதிகம் ஏற்படுவது வழக்கம்.  அது இவர்களுக்கும் அதிக அளவில் நடைபெற்றுள்ளது.  பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ள இந்தப் பெண்களால் அதை எதிர்த்து போராட முடிவதில்லை.  எனவே இங்குள்ள விதவைப் பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவதே முக்கியம்.  இல்லை எனில் இவர்கள் மற்றவர்களை எதிர்பார்த்து வாழ வேண்டி இருப்பதால் இவர்களை பாலியல் ரீதியாகவே பலர் பயன்படுத்துவார்கள்.  இவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளதால் தான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.  இன்றும் பல பணக்கார விதவைகள் தங்களின் வீடுகளில் மதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.