டெல்லி:

மார்ச் 31ம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மார்ச் 31ம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் தராதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், “ ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசத்தைக் குறைத்தது ஏன்?. இது தொடர்பாக 2 வாரத்துக்குள் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக ஏப்ரல் 11ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

“மார்ச் 31ம் தேதி வரை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டும் அவகாசம் அளித்தது ஏன்? டிசம்பர் 30ம் தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றாதவர்களுக்கு, மாற்ற வசதி செய்து கொடுக்காதது ஏன்? மார்ச் 31ம் தேதி வரை இந்திய குடிமக்களுக்கு ஏன் ரூபாய் நோட்டுகளை மாற்ற வாய்ப்பு தரவில்லை” என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது