சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன்: உச்ச நீதிமன்றம் கேள்வி

டில்லி:

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரத்தை மத்திய அரசு ஏன் ஒரே நாளில் பறித்தது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட அதிகார மோதலை தொடர்ந்து, இருவரும், பரஸ்பரம் ஊழல் புகார்களை கூறினர். இதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அலோக் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இரண்டு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல், ஒரே நாளில் ஏற்படவில்லை. எனவே, ஒரே நாள் இரவில் அலோக் வர்மாவின் அதிகாரத்தை, தேர்வுக் குழுவிடம் ஆலோசனை நடத்தாமல் பறித்தது ஏன்? அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும். அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்துவதில் இருந்த சிக்கல் என்ன? என கேள்வி எழுப்பினார்.

மேலும், சிறந்த தீர்வு ஏற்பட, மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நேர்மையாக இருப்பது முக்கியம். அலோக் வர்மா, இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், அதுவரை ஏன் காத்திருக்கவில்லை. இது குறித்து ஏன் தேர்வுக் குழுவிடம் ஆலோசனை நடத்தவில்லை எனும் கேள்விகளையும் எழுப்பினார்.

அதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், இந்த நிலைமை அசாதாரணமானது என்றும், சிபிஐ மூத்த இயக்குநர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே இதில் தலையிட்டு சில முடிவுகளை எடுக்கவில்லை எனில் சிவிசி மீதுதான் ‘கடமை தவறியக் குற்றச்சாட்டு’ எழும் என்றார்.

அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறுகையில், வர்மா சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்டதாக, வேண்டுமென்றே வாதாடுகிறார். அவரது பொறுப்புகள் மாற்றப்பட்டதுடன், செயல்படவும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வர்மா மீதான நடவடிக்கை “பொதுமக்கள் நலனுக்காக நிறுவன ரீதியான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக” எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிகப்பட்டது.

அலோக் வர்மா சார்பில் ஆஜரான பாலி நாரிமன் வாதாடுகையில், எந்த சூழ்நிலையாக இருந்திருந்தாலும் அரசு தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இந்த வழக்கில், இடமாற்றம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது மட்டும் அர்த்தம் இல்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இன்னும் 10 நாட்களுக்குள் இதன் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.