டெல்லி:

தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி
மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்திமிங்களும்
ஆக்கிரமித்திருப்பதாக பொதுக் கணக்குக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்திருந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து
வழக்கறிஞர் எஸ் என் பரத்வாஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 1997 ம் ஆண்டு கணக்குப்படி 6 ஆயிரத்து 903 ஏக்கர் அரசு நிலங்கள்
தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்றும் ஆனால் 2009ம் ஆண்டு அது 14 ஆயிரத்து 539 ஏக்கராக உயர்ந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தமனு தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹெர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர், நீதிபதி கேஹெர், பாதுகாப்புத்துறைக்குச்
சொந்தமான 14 ஆயிரம் நிலத்தை மீட்க மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ஒருங்கிணைந்த அதிகார மையத்தை உருவாக்கி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி மத்திய அரசுக்கு நோட்டிஷ் அனுப்ப உத்தரவிட்டார்.