50% இட ஒதுக்கீடு இல்லை…சமூகநீதி மீது தாக்குதல் நடத்தும் அதிமுக – பாஜக: ஸ்டாலின் காட்டம்

சென்னை:
மிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தர விட முடியாது எனக்கூறி தமிழகம் சார்பில் மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் பெரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , மதிமுக , விசிக உட்பட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக – பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது -ஸ்டாலின் கண்டனம்.

நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடஒதுக்கீடு வழங்க முடியாது என தீர்ப்பளித்ததை அடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களில், மத்திய பா.ஜ.க. அரசின் பிடிவாதத்தாலும், அ.தி.மு.க. அரசின் துணிச்சலின்மையாலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, இந்த ஆண்டே 50% இடத்தை வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது!

இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையெனில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் தைரியம் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு இருக்கிறதா?” எனக் கடுமையாக தமிழக அரசை தாக்கி உள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு 50% ஓபிசி இடஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து ஆளும் அதிமுக மற்றும் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய இடங்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய மத்திய, மாநில அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்குமாறு உயர் நீதிமன்றம் ஜூலை 27 அன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது இந்த குழுவின் எந்தவொரு முடிவும் எதிர்கால கல்வி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும், தற்போதைய முடிவுக்கு அல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.