டில்லி:

உ.பி. மாநிலத்தில் ராமர் கோவில் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பான உரிமை தொடர்பான வழக்கில், தலையிடும் இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.

ராமர் கோவில் நிலம் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி உள்பட 14 பேர் தங்களையும் வழக்கில் இணைத்துக் கொள்ளும்படி இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் முஸ்லீம் வக்பு வாரியம், ராமர்கோவில் நிர்வாகம் மற்றும் நிர்மோகி அகாரா தவிர வேறு யாரையும் மனு தாரராக சேர்த்துக்கொள்ள முடியாது என்ற உச்சநீதி மன்றம், 14 மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

 

1992 ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி உ.பி.யில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது. அதையடுத்து, அந்த இடத்தின் நிலம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.

பாபர் மசூதி அமைந்திருந்த 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று இந்து அமைப்புகளும், முஸ்லிம் வக்பு வாரியமும் கோரி வந்தது.

அதைத்தொடர்ந்து நிலம் யாருக்கு  சொந்தம் என்று உரிமை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கில் வழக்கு தொடரப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  சம்பந்தப்பட்ட நிலத்தை  முஸ்லீம் வக்பு வாரியம், ராமர்கோவில் நிர்வாகம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியோர் சமமாக பிரித்து உபயோகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அஷோக் பூஷண், நஜீப் அமர்வு விசாரித்து வருகிறது.

ஏற்கனேவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற  விசாரணையின்போது, இது குறித்து பிப்ரவரியில் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர். இந்நிலையில் கடந்த விசாரணையின்போது,   வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது இருப்பதால், இவ்வழக்கை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமர் கோவில் நிலம் பிரச்சினையில் குறுக்கீடு செய்யும் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்வதாக  உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, அயோத்தியில் உள்ள ராமர்கோவிலை பக்தர்கள் வணங்குவதற்கான அடிப்படை உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடதத்தககது.