டில்லி

டவுளுக்கு அளிக்கும் மலர்களை பூஜைக்குப் பின் கோவில் நிர்வாகம் ஆதரவற்ற பெண்கள் வாசனை திரவியம் செய்ய கொடுக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மதுரா நகர் கிருஷ்ணர் கோவிலில் கடவுளுக்கு ஏராளமான மலர்கள் பூஜைகளுக்காகவும் அலங்காரத்துக்காகவும் பக்தர்களால் அளிக்கப்படுகின்றன.   பூஜை முடிந்த பிறகு அந்த மலர்கள் யமுனை ஆற்றில் சேர்க்கப்படுகின்றன.   இதனால் ஆறு மாசு படுவதாகவும் அதை தடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.   அந்த மனு நீதிபதிகள் லோகுர் மற்றும் தீபக் குப்தாவின் கீழுள்ள அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்கள் பாழாக்கப் படக்கூடாது எனக் கூறி அவைகள் ஆற்றில் விடப்படுகின்றன.   ஆனால் இதனால் ஆறு பாழாகிறது.   இதை தடுக்க வேண்டும்.   எனவே பூஜைக்குப் பின் இந்த மலர்களை ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகள் இல்லத்துக்கு கோவில் நிர்வாகம் வழங்கலாம்.   இந்த மலர்களைக் கொண்டு அவர்கள் வாசனை திரவியங்கள், கலர் பொடிகள் மற்றும் ஊதுபத்திகள் தயாரித்து தங்கள் வாழ்வாதார செலவுக்கு பயன்படுத்துவார்கள்.

எனவே இனி இந்த மலர்களை உத்திரப் பிரதேச அரசு நடத்தி வரும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகள் இல்லத்துக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகிறது.   இந்த திட்டம் வெற்றி அடையுமானால் இதை வாரனாசி, திருப்பதி, மற்றும் பூரி ஆகிய கோவில்களிலும் விரிவு படுத்தலாம்.   இதை மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்”  என கூறி உள்ளனர்.