டில்லி

மோடி அரசு விரைவில் லோக்பால் நீதிமன்றங்கள் அமைக்கும் என நம்புவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லோக்பால் நீதிமன்றங்கள் அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்த மோடி அரசு இன்று வரை அதை அமைக்கவில்லை.  இது குறித்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி ஆகியோரின் அமர்வின் கீழ் வழக்கு விசாரணையில் உள்ளது.   இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு,  ”லோக்பால் சட்டத்தின் படி அதை அமைக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற்றிருக்க வேண்டும்.    ஆனால் தற்போது மக்கள் அவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லை” என தெரிவித்தது.

தற்போது மக்கள் அவையில் காங்கிரஸ் அதிக உறுப்பினரைக் கொண்ட எதிர்க்கட்சியாக உள்ளது.   அந்தக் கட்சியில் 48 மக்களவை உறுப்பினர் மட்டுமே உள்ளதால் எதிர்க்கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை.   அதனால் லோக்பால் குழுவில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர், “சிறப்பு அழைப்பாளர் என்பவருக்கு எந்த ஒரு கருத்துச் சொல்லவோ அல்லது சட்டம் கொண்டு வரவோ உரிமை கிடையாது.  ஆகவே வெறும் பார்வையாளராக அந்தக் குழுவில் பங்கு பெற நான் விரும்பவில்லை” எனக் கூறி மறுத்து விட்டார்.

இன்று லோக்பால் நீதிமன்றம் அமைப்பது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தலைமை வழக்கற்ஞர் வேணுகோபால் லோக்பால் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக உள்ளதாகவும் விரைவில் அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதைக் கேட்ட அமர்வு மத்திய அரசு விரைவில் லோக்பால் நீதிமன்றங்கள் அமைக்கும் என நம்புவதாக கூறி உள்ளது.    மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு எந்த ஒரு உத்தரவும் அளிக்க மறுத்து விட்ட  அமர்வு இந்த வழக்கின் விசாரணையை வரும் மே மாதம் 15 ஆம் தேதி அன்று ஒத்தி வைத்தது.