கருச்சிதைவு செய்துக் கொள்ள கணவர் சம்மதம் தேவை இல்லை : உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

டில்லி

ருச்சிதைவு செய்துக் கொள்ள மனைவிக்கு கணவரின் சம்மதம் தேவை இல்லை என ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு கணவனும், மனைவியும் தங்கள் மகனுடன் வசித்து வந்தனர்.   இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ்ந்தனர்.   தனது மகனுடன் பெற்றோரிடம் வசித்து வந்த அந்தப் பெண் தன் வாழ்வாதாரத்துக்கு பணம் தேவை என வழக்கு தொடர்ந்தார்.   பிறகு குடும்ப நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.  இந்நிலையில் மனைவி மீண்டும் கர்ப்பம் ஆனார்.   அந்தக் கருவைக் கலைக்க விரும்பிய மனைவிக்கு கணவன் ஒப்புதல் தரவில்லை.

இதனால் மீண்டும் கணவரைப் பிரிந்த அந்தப் பெண் கருச்சிதைவு செய்துக் கொண்டார்.  கருவுக்கு 12 மாதங்கள் ஆகாததால் கணவரின் சம்மதம் தேவைப் படாது என மருத்துவர் ஒருவர் கருச்சிதைவை செய்தார்.  இதை எதிர்த்து அந்தக் கணவர் பஞ்சாப் அரியான உயர்நீதிமன்றத்தில்,  தன் மனைவி தன் விருப்பமின்றி கருக்கலைப்பு செய்ததால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கோரி மனைவி, மனைவியின் பெற்றோர், மனைவியின் சகோதரர், மற்றும் கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் உயர்நீதி மன்றம்,  ”தேவையற்ற கர்ப்பம் என ஒரு மனைவி நினைத்தால் கருச்சிதைவு செய்துக் கொள்ள உரிமை உண்டு.  இதனால் பாதிக்கப்படுவது மனைவி என்பதால் முடிவு எடுக்கும் முழு உரிமையும் பெண்களுக்கு உண்டு” என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அந்தக் கணவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.   மேலும் அந்தக் கணவர் உள் நோக்கத்துடன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்,  அவருக்கு நஷ்ட ஈடு எதுவும் தரத் தேவை இல்லை எனவும் தீர்ப்பில் கூறி உள்ளது.  அத்துடன் வழக்குச் செலவுக்காக மனைவிக்கு ரூ.25000 கணவன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்து உள்ளது.