டில்லி

விவாகரத்து வழக்குகளில் தற்போதுள்ள ஆறு மாத அவகாசம் தேவையில்லை என உச்ச நீதி மன்றம் கருத்து கூறி உள்ளது

விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு இந்து திருமண சட்டத்தின் படி ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.  இந்த ஆறு மாதங்களுக்குள் தம்பதியர் இருவரும் கருத்தை மாற்றிக் கொண்டு சேர்ந்து வாழலாம் என நினைத்து இந்த அவகாசம் வழங்கப் படுகிறது.

இந்நிலையில் நேற்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் கோயல் மற்றும் லலித் ஆகியோரின் அமர்வில் ஒரு விவாகரத்து வழக்கு வந்தது.  அந்த வழக்கில் 8 ஆண்டு காலம் பிரிந்து வாழும் கணவன் – மனைவி விவாகரத்து கோரி இருந்தனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், “எட்டு வருட காலமாக ஏற்கனவே பிரிந்து வாழும் இருவரும், மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.  அப்படி இருக்க, ஆறு மாத கால அவகாசம் தருவதை நீதிமன்றங்கள் நிறுத்தி விடலாம்.  இந்து திருமண சட்டம் விதி எண் 13பி(2) கூறுகிற ஆறுமாத அவகாசம் என்பது ஒரு வழிக்காட்டுதல் தானே தவிர கட்டாயம் இல்லை.

இனி தம்பதியர் இணைந்து வாழ வழியே இல்லை என்னும் போது நீதிமன்றம் இந்த அவகாசம் கொடுக்க தேவையில்லை. மியூச்சுவல் கன்செண்ட் என்னும் இருவரும் கருத்தொருமித்து விவாகரத்து கோருகிற போது இந்த ஆறு மாத கால அவகாசம் தேவை இல்லை என அவர்களே தங்கள் மனுவில் தெரிவிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.