உ. பி. என்கவுண்டர்கள் குறித்து பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி

த்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் என்கவுண்டர்கள் குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் அரசு அமைத்ததில் இருந்து பலர் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.    இது குறித்து நாடெங்கும் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.    இவற்றில் பல என்கவுண்டர்கள் போலியானவை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.   மேலும் இது குறித்து விசாரணை தேவை என பல சமூக அமைப்புகள் கூறி வருகின்றன.

மக்கள் சட்ட உரிமைக் கழகம் இது குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.   இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரிக்கப்படுகிறது.    இந்த வழக்கு மனுவில் இந்த என்கவுண்டர்கள் சட்டத்துக்கு புறம்பாக நடப்பதாகவும் அதனால் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில், “கடந்த ஒரு வருடம் மட்டும் 1100 என்கவுண்டர்கள் நடந்துள்ளன.   இவற்றில் 49 பேர் கொல்லபட்டுள்ளனர். 370 பேர் காயம் அடைந்துள்ளனர்.   அரசு அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது சட்டமாகும்.   ஆனால் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசே இவ்வாறு படுகொலை புரிகிறது” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்ற அமர்வு அனுப்பி உள்ளது.   இதற்கான பதிலை இன்னும் இருவாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என உ பி மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.