சென்னை மாநகராட்சியில் எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர்வு மையங்கள்! தேசிய எஸ்சி ஆணையம் வலியுறுத்தல்

சென்னை:

சென்னை மாநகராட்சியில் எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டும்  தேசிய எஸ்சி ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

தேசிய எஸ்சி ஆணையம் சார்பில் எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கான குறைதீரப்பு முகாம், சென்னை மாநகராட்சி மாளிகையான  ரிப்பன் மாளிகை வளாகத்தில்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தேசிய எஸ்சி ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இணை ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் பா.மதுசூதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி மற்றும் மாநகராட்சியில் உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எஸ்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். வார்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வார்டு அலுவ லகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,தற்காலிக தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும், மழை காலத்தில் பணியாற்றும் வகையில், மழை கோட், சீருடை, காலணி, சோப்பு போன்றவை  காலம் தாழ்த்தாது வழங்க வேண்டும் மற்றும், ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என பல் கோரிக்கைகள் முன்வைத்தனர்.

இதுகுறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய துணைத் தலைவர்,  சென்னை மாநகராட்சியில் பணி புரியும் எஸ்சி, எஸ்.டி. தொழிலா ளர்களின் புகார்கள் மீது தீர்வுகாண மாநகராட்சி மண்டல அளவில் குறைதீர் மையம் ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ‘முரசொலி’ அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைக்கப்பட்டுள ளதாக வந்த புகாரின் பேரில், ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.