டில்லி:

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் வரும் 3ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

எஸ்.சி. மற்றும் எஸ்.டி.)மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக வழக்கில்,  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை வழக்கு பதிவு செய்த உடனேயே கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வடமாநிலங்களில் கலவரம் நடைபெற்றது. இதில் பல உயிர்கள் பறிபோனது. ஏராளமான வாகனங்களும் தீக்கிரையாகின.

இந்நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களும் சீராய்வு  மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், நீதிபதிகள் ஏ.கே. கோயல், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக  ஆஜர் ஆகி, மறு ஆய்வு மனுவின்மீது மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துவிட்டதால், விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து மறு ஆய்வு மனுக்களை மே 3-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.