நீட் தமிழ் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் : உச்சநீதிமன்றம் தடை

டில்லி

யர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாட்களில் பல குழறுபடிகள் இருந்ததாக கூறப்பட்டது.  அதை ஒட்டி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சிபிஎஸ்இ க்கு உத்தரவிட்டது.   தமிழகத்தில் இதை ஒட்டி மருத்துவ கல்வி கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி பி எஸ் இ மேல் முறையீடு செய்தது.  அந்த மனுவில், “தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டே வினாத்தாள் அமைக்கப்பட்டது.  எனவே இத்தகைய குழறுபடிகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.  அத்துடன் ஒரு சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண் வழங்கினால் அவர்கள் மொத்த மதிப்பெண்ணை விட அதிகம் பெறுவார்கள்” என குறிப்பிட்டிருந்தது.

இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.  அத்துடன் நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வை தொடர தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  மேலும் தமிழில் உள்ள கேள்விகள் தெளிவாக இல்லை என்றால் மாணவர்கள் அதை ஆங்கில கேள்விகளுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது.