டில்லி

குஜராத் மாநிலம் தலாலா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் குறித்த தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

குஜராத் மாநிலம் தலாலா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பி டி பராட் என்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் மீது ஒரு திருட்டு குற்றத்தில் நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. அதை ஒட்டி கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி அவரை குஜராத் மாநில சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அத்துடன் தலாலா தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்தார்.

கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்தது. அப்போது மக்களவை தேர்தலுடன் தலாலா சட்டப்பேரவை தொகுதிக்கும் இடை தேர்தல் நடக்கும் என ஆணையம் தெரிவித்தது. இதை எதிர்த்து அந்த தொகுதியின் உறுப்பினர் பராட் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 27ஆம் தேதி அன்று குஜராத் உயர்நீதிமன்றம் பராட் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது. அத்துடன் சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்து விட்டது. அதை ஒட்டி பராட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் இடைத் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் உள்ள அமர்வு தேர்தல் குழுவுக்கு இது குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டிஸில் ஆணையம் அவசரகதியில் இடைத்தேர்த குறித்தமுடிவு எடுத்துள்ளதாக கூறி உள்ளது.