சென்னை:

தினகரன் ஆதரவு அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பிய நிலையில்,அதை எதிர்த்து திமுக மற்றும் 2 அதிமுக எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான  அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய  3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதி மன்ற அமர்வு இடைக்கால தடை விதித்து உள்ளது.

அதி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அவர்கள்மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க, சபாநாயகரிடம் புகார் அளித்தது. அதையடுத்து, சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் கேட்டு 6ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி  நோட்டீஸ் அனுப்பினார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  திமுக சார்பில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்  குறித்து மனு கொடுக்கப்பட்டது. மேலும்,  உச்சநீதிமன்றத்திலும் அவசர வழக்காக விசாரிக்க கோரி தி.மு.க. சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரும் உச்சநீதி மன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை 6ந்தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்திருந்த நிலையில், வழக்கு இன்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, 3 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

உச்சநீதி மன்றத்தின்  இந்த அதிரடி உத்தரவு அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.