டில்லி,

‘கங்கையும், யமுனையும் நதிகளல்ல அவை உயிருள்ள மனிதர்கள்’ என பரபரப்பு உத்தரவை பிறப்பித்த உத்தரகாண்ட் ஐகோர்ட்டுதீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

கங்கை நதி தூய்மை தொடர்பான பொது நல வழக்கொன்றில் உத்தரகாண்ட் நீதிமன்றம் கடந்த மார்ச்  20ந்தேதி ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீர்ப்பில்  “ புனித நதிகளான கங்கை, யமுனை இரண்டையும் உயிருள்ள மனிதர்களாக் கருத வேண்டும். கங்கை நதியை தூய்மைப்படுத்தி, புனரமைக்கும் நமாமி கங்கா திட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை வழக்கறிஞர் இருவரும் இந்த நதிகளின் சட்ட ரீதியான பெற்றோர்களாக செயல்பட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும்”

என்று ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு கூறியிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உத்தரகாண்ட் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதி மன்றம், உத்தரகாண்ட் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர்.

ஏற்கனவே, இந்தியாவின் புனித நதிகளாக கங்கை, யமுனை நதிகள் கருதப்படுகின்றன. கங்கையில் தலை முழுகினால் பாவங்கள் அனைத்தும் தீரும் என மக்களிடையே பரவலான நம்பிக்கை உள்ளது.

எனினும் உலகின் மாசடைந்த 10 நதிகள் பட்டியலில் கங்கையும் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக கங்கையை தூய்மைப்படுத்த பலகோடி ரூபாய்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.