திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மனாபசாமி கோவில் கடைசி பொக்கிஷ அறை திறப்பது குறித்து திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க உள்ளது.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மனாபசாமி கோவில் உலகப் புகழ் பெற்றதாகும்.  இந்த கோவில் பெருமாள் கோவில் ஆகும்.  திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் கேரள தமிழ் கலந்த முறையில் இயங்கி வருகிறது.  இந்த கோவிலில் வேட்டி, புடவை, தாவணி அணிந்தோருக்கு  மட்டுமே அனுமதி உண்டு.  வைணவர்கள் வழிபடும் 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும்

கடந்த 1949 ஆம் வருடம் அனைத்து சமஸ்தானங்களும் இணைக்கப்பட்ட போது திருவாங்கூர் மற்றும் கொச்சின் சமஸ்தானமும் இணைந்தன.  எனவே இந்த மன்னர் குடும்பம் நிர்வகித்து வந்த கோவில்கள் திருவாங்கூர் மற்றும் கொச்சின் தேவசம் போர்டின் கீழ் வந்தன.    ஆயினும் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி ஸ்ரீபத்மனாபசாமி கோவில் நிர்வாகம் அப்போதைய திருவாங்கூர் அரசர் ஸ்வாதி திருநாளிடம் ஒப்படைக்கப்பட்டது.  அவர் மறைவுக்குப் பிறகு அவர் சகோதரர் உத்திராடம் திருநாள் கோவிலை நிர்வகித்து வருகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு உத்திராடம் திருநாள் கோவில் சொத்துக்கள் அனைத்தும் தங்கள் குடும்பத்துடையது என அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.   இதை எதிர்த்துப் பல வழக்குகள் பதியப்பட்டன.   இதில் ஒரு வழக்கில் ஒரு நீதிமன்றம் பொக்கிஷ அறைகளை திறக்க உத்தரவிட்டது.   இதே உத்தரவைக் கேரள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவே இந்த பொக்கிஷ அறைகள் திறக்கப்பட்டன.

இந்த கோவிலில் ஆறு பொக்கிஷ அறைகள் உள்ளன.  இதுவரை 5 அறைகள் மட்டுமே திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கிடப்பட்டுள்ளன.  இந்த ஐந்து அறைகளிலும் ஏராளமான தங்கம், வைரம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த கற்கள் கொண்ட நகைகள், சிலைகள், பாத்திரங்கள், நாணயம் என ஏராளமாக இருந்துள்ளன.  இவை அனைத்தும் கோவிலுக்கு மன்னர் மற்றும் பக்தர்கள் அளித்த காணிக்கை எனக் கூறப்படுகின்றன.

கடைசி மற்றும் ஆறாம் பொக்கிஷ அறை இதுவரை திறக்கப்படவில்லை.   இதற்குக் காரணம்  இந்த ஆறாம் பொக்கிஷ அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என ஒரு சாபம் உள்ளதாக அரச குடும்பத்தினர் தெரிவித்ததாகும்.   இதனுள் என்ன உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது என்றாலும் மற்ற அறைகளைக் காட்டிலும் பன்மடங்கு விலை மதிப்புள்ள  பொருட்கள் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆறாம் பொக்கிஷ அறையை திறக்க வேண்டும் என வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.  இந்த வழக்கின் விசாரணை தொடங்கியதும் அவர் திடீரென மரணம் அடைந்தார்.  இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.  அவரது திடீர் மரணத்துக்கு ஸ்ரீபத்மனாபசாமியின் சாபம் எனப் பலரும் நம்பி வருகின்றனர்.

மேலும் சிலர் இந்த ஆறாம் பொக்கிஷ அறை அரேபியக் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகும் இந்த அறையைத் திறந்தால் கடல் நீர் உள்ளே புகுந்து விடும் எனவும் கூறுகின்றனர்.   மேலும் இந்த பொக்கிஷ அறையின் கதவுகளில் பாம்பு உருவம் செதுக்கப்பட்டுள்ளதால் இந்த சொத்துக்களைப் பாம்புகள் காத்து வருவதாகவும் அவை திறந்தால் அவற்றின் விஷம் உலகெங்கும் பரவும் எனவும் நம்பிக்கையும் உள்ளது.

இந்த மர்மம் நிறைந்த ஆறாம் பொக்கிஷ அறை திறப்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இது குறித்து வரும் திங்கள் அன்று உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க உள்ளது.  இதை இந்தியா மட்டுமின்றி இந்தியர்கள் வசிக்கும் பல வெளிநாடுகளில் உள்ளோரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.