அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா, நிர்மோனி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இவ்வழக்கில் அவர் தீர்ப்பு வழங்கவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழக்கு பட்டியலில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பால் நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கி பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க ஏற்கனவே மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி