போராட்டத்தில் நடக்கும் வன்முறையை தடுக்க விரைவில் உச்சநீதிமன்றம் வரைமுறை

டில்லி

போராட்டங்களின் போது நடக்கும் வன்முறையை தடுக்க உச்சநீதிமன்றம் சில வரைமுறைகளை நிர்ணயிக்க உள்ளது.

கடந்த 2009 ஆம் வருடம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் போராட்டம் நடக்கும் போது வன்முறையால் பொதுச் சொத்துக்கள் பாழாவது குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.   அத்துடன் அந்த போராட்டத்தை நடத்துவோர் போராட்ட நேரத்தில் பாழாகும் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கான நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும் என தெரிவித்திருந்தது.

சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியான பத்மாவத் இந்திப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.   வட இந்தியாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.    இதில் கலந்துக் கொண்ட ராஜ்புத் அமைப்பான காரணி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் நடத்திய போராட்டதில் கடும் வன்முறை வெடித்து ஏராளமான அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டன,

இதை ஒட்டி சமூக நல அமைப்பான கொடுங்காளூர் திரைப்பட கழகம் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.   அந்த வழக்கில் இது போல போராட்டங்களின் போது ஏற்படும் கலவரங்களில் பல பொருட்கள் பாழாவதாகவும் ஆனால் உச்சநீதிமன்ற 2009 ஆம் வருட தீர்ப்பின் படி எந்த அமைப்பும் நஷ்ட ஈடு தருவதில்லை எனவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், ”போராட்டக்காரர்கள் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பொழுது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.  இது போல நடப்பதை தடுக்க காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதை ஒட்டி உச்சநீதிமன்றம் விரைவில் போரட்டங்களின் போது அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.   அத்துடன் இந்த வன்முறைகளை தடுக்க தேவையான வரைமுறைகள் விரைவில் உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.