டில்லி

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 14 அன்று விசாரணை நடைபெற உள்ளது.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையத்தில் சபர்மதி விரைவு ரெயிலின் இரு பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது,   இந்த ரெயில்  பெட்டிகளில் பயணம் செய்த 59 அயோத்தி கோவில் கரசேவகர்கள் உயிருடன் எரிந்து மரணம் அடைந்தனர்.

இதனால் குஜராத் மாநிலத்தில் கடும் கலவரம் வெடித்தது   இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.   மரணம் அடைந்தோரில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.    இக்கலவரங்களைத் தடுக்க தவறியதாக அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மற்றும் மாநில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையொட்டி கோத்ரா ரெயில் எரிப்பு மற்றும் அதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.  அந்தக் குழு கடந்த 2012 ஆம் அண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் மோடி மற்றும் 63 மாநில அதிகாரிகள் குற்றமற்றோர் எனக் கூறப்பட்டு  அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தக் கலவரத்தில் உயிரிழந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் எசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.   அந்த மனுவை கடந்த 2017 ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அதை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணையின் போது ஜாகியா ஜாஃபிர்யின் வழக்கறிஞர் அபர்ணா பட், “இந்த வழக்கின் விசாரணை  வரும் ஹோலி பண்டிகைக்குப் பிறகாவது நடக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு, “பலமுறை இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டாலும் ஒரு நாள் நிச்சயம் விசாரணை நடைபெறும்.  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளனர்.