உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலை முறையாக சட்டப்படி தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதோடு, இடஒதுக்கீடு மற்றும் மறுவரைவு முடிவுறாமல் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதாகவும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகளும் தங்களை ஒரு தரப்பாக இணைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு தரப்பில் புதிதாக மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திமுக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசை போல மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால், நீதிமன்றங்கள் இதில் தலையிட இயலாது. இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்காகவே திமுக திட்டமிட்டு செயல்படுகிறது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்படாத வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடானது, ஏற்கெனவே தமிழ்நாடு அரசால் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 16.9.2016ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

எனினும், பிராந்திய வார்டுகள் விஷயத்தில் 31 மாவட்டங்களைப் பொருத்தமட்டில் 20.5.2019ல் ஒரு புதிய இடஒதுக்கீடு உத்தரவு வெளியிடப்பட்டது. இது மனுதாரர் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதேவேளையில், திமுகவின் மேல்முறையீட்டு மனு, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. எனவே, அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்குகளோடு, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள மனுக்களும் சேர்ந்து இன்று விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா ? அல்லது தள்ளிப்போகுமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.