22 பேர் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்

டில்லி:

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற 22 போலி என்கவுண்ட்டர் வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கைக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்த பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குஜராத் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வரும் 12-ம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, கடந்த 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை 22 பேர் தீவிரவாதிகள் என்ற போர்வையில் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்து கொல்லப்பட்டனர்.

இவர்கள் கொலையில் உள்நோக்கம் இருப்பதால், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பி.ஜி. வர்கீஸ், கவிஞர் ஜாவித் அக்தர் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ் பேடி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, போலி என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்தவும், விசாரணையைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

இதற்கிடையில், கடந்த 2014ம் ஆண்டு மனுதாரர்களில் ஒருவரான வர்கீஸ் இறந்துவிட்டார். இந்நிலையில், விசாரணையை முடித்து, ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ். பேடி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்துவிட்டார்.

இந்த அறிக்கை குறித்த விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, தங்களின் பதில் மனுவைத் தாக்கல் செய்ய கிறிஸ்துமஸ் வரை அனுமதி வேண்டும் என்று குஜராத் அரசு தரப்பில் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 12-ம் தேதிக்குள் குஜராத் அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.